Asian Games : வலுவான தென்கொரியாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த இந்திய வாலிபால் அணி
செய்தி முன்னோட்டம்
சீனாவின் ஹாங்சோவில் புதன்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், வாலிபால் குழு சி போட்டியில், மூன்று முறை சாம்பியன் மற்றும் 2018 வெள்ளிப் பதக்கம் வென்ற தென் கொரியாவை தோற்கடித்து ஆடவர் இந்திய அணி மறக்கமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
2 மணி நேரம் 38 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் முதல் செட்டை 25-27 என்ற கணக்கில் போராடி இந்திய அணி இழந்தது.
எனினும், அதன் பின்னர் மீண்டு வந்து அடுத்தடுத்த செட்களை 29-27 மற்றும் 25-22 என்ற கணக்கில் தென்கொரியாவை தோற்கடித்தது.
மேலும், நான்காவது சுற்றில் தென்கொரியா இந்தியாவை 25-20 என்ற கணக்கில் தோற்கடித்தாலும், அடுத்து ஐந்தாவது சுற்றில் 17-15 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
India volleball team stuns strong south korea
3-2 என்ற செட் கணக்கில் இந்தியா வெற்றி
இதன் மூலம் 3-2 என்ற செட் கணக்கில் இந்தியா வலுவான தென்கொரியாவை வீழ்த்தி அசர வைத்துள்ளது.
மேலும், இந்திய வாலிபால் அணி தனது குழுவில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.
இந்திய வாலிபால் அணி கடைசியாக 1986இல் வெண்கலம் வென்றதே உச்சகட்டமாக உள்ளது.
மேலும், 2018இல் நடந்த கடைசி ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா 12வது இடத்தில் இருந்தது.
இந்த முறை ஹாங்சோவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் வாலிபால் போட்டியில் மொத்தம் 19 அணிகள் பங்கேற்கின்றன.
பிரீமியர் வாலிபால் லீக் போட்டி மூலம் கடந்த சில ஆண்டுகளாக இந்திய வாலிபால் வீரர்களின் செயல்திறன் மேம்பட்டுள்ள நிலையில், இந்த முறை நிச்சயம் பதக்கம் வெல்லும் முனைப்புடன் உள்ளது.