ஆசிய விளையாட்டில் சீன அதிகாரிகளின் தில்லுமுல்லு; அஞ்சு பாபி ஜார்ஜ் கோபம்
இந்திய தடகள கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவரான அஞ்சு பாபி ஜார்ஜ், சீன அதிகாரிகள் வேண்டுமென்றே இந்திய விளையாட்டு வீரர்களை குறிவைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சீனாவில், மற்ற நாட்டு வீரர்கள் வெற்றி பெறுவது கடினம் என்றும், அந்நாட்டு அதிகாரிகள் எப்போதும் சில விரும்பத் தகாத செயல்களை செய்து, விளையாட்டு வீரர்களை சீர்குலைக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா பங்கேற்ற போது, அவரது முதல் எறிதலை ரத்து செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், உரிய சட்ட முயற்சிக்குப் பிறகு, நீரஜ் சோப்ரா மீண்டும் இடம் பெற்றார்.
நீரஜ் சோப்ரா விவகாரத்தில் நடந்தது என்ன?
நீரஜ் சோப்ராவின் பெயர், வீரர்கள் பலகையில் இடம்பெறாத நிலையில், நீரஜ் நடுவர்களை அணுகினார். இதையடுத்து போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பல நிமிட ஆலோசனைக்குப் பிறகு, நீரஜ் வீசிய தூரத்தைக் கணக்கிட உபகரணங்கள் தவறிவிட்டன என்று உறுதியான பிறகு, நீரஜ் மீண்டும் ஈட்டியை வீசும்படி கேட்கப்பட்டார். இதுகுறித்து நீரஜ் சோப்ராவும், இப்படியொரு மோசமான நிகழ்வை இதுபோன்ற சர்வதேச மட்டத்திலான போட்டிகளில் தான் கண்டதில்லை என அதிருப்தி தெரிவித்தார். அஞ்சு பாபி ஜார்ஜ் இது குறித்து கூறுகையில், கடந்த காலங்களில், ஜோதி, அன்னு ராணி உள்ளிட்ட பலருக்கும் நடந்துள்ளதாக வேதனை தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து மேல்மட்டத்தில் முறையிட திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.