41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம் வென்ற இந்திய வீரர்களின் பின்னணி
சீனாவில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் குதிரையேற்றம் டிரஸ்ஸேஜ் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது. இதன் மூலம் 1982ல் டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு பிறகு, குதிரையேற்றத்தில் இந்தியா முதல்முறையாக தங்கம் வென்றுள்ளது. டிரஸ்ஸேஜ் போட்டியில் சாதனை படைத்த இந்திய அணியில் சுதிப்தி ஹஜேலா, திவ்யகிரித் சிங், ஹிருதய் சேடா மற்றும் அனுஷ் அகர்வாலா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில் சுதிப்தியைப் பொறுத்த வரையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அவர், 10 வயதிலிருந்தே குதிரையில் சவாரி செய்து வருகிறார். மேலும் 2013 ஆம் ஆண்டு தேசிய போட்டியில் பங்கேற்று தனது முதல் பதக்கத்தையும் வென்றதோடு, இதுவரை 52 தேசிய மற்றும் 7 சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார்.
குதிரையேற்றத்தில் சாதித்த இந்தியர்களின் பின்னணி
ஜெய்ப்பூரைச் சேர்ந்த திவ்யகிரித் சிங், ஐரோப்பாவில் நடந்த தேர்வு சோதனைகளில் பங்கேற்று கடுமையான பயிற்சியை மேற்கொண்டதோடு, சர்வதேச அளவில் சிறந்த திறமையாளர்களுக்கு எதிராக போட்டியிட்ட அனுபவத்தையும் கொண்டுள்ளார். ஹிருதய் சேடா 6 வயதிலிருந்தே குதிரையேற்ற விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர் ஆவார். குதிரையேற்றத்தில் புகழ்பெற்ற ஹான்ஸ் பயூம்கார்ட் மற்றும் எமிலி பாரி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் ஐரோப்பாவில் பயிற்சி பெற்று அதில் சிறந்து விளங்கினார். அணியின் நான்காவது மற்றும் இறுதி உறுப்பினர் அனுஷ் அகர்வாலா தனது மூன்று வயதில் முதல் முறையாக குதிரையில் அமர்ந்தார். அவருக்கு 8 வயதாக இருந்தபோது அவரது தாயார் சவாரி பயிற்சி பெறச் சேர்த்தார். தனது கடின உழைப்பின் மூலம் தொடர்ந்து முன்னேறி இந்தியாவுக்கு தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.