ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வியாழக்கிழமை (செப்டம்பர் 21) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா மற்றும் மலேசியா இடையே நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மலேசியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஜோடியான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் தொடக்கம் முதலே மலேசிய பந்துவீச்சாளர்களை சிதறடித்தனர். ஸ்மிருதி மந்தனா வெறும் 16 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி அவரது விக்கெட்டை இழந்தது. அவர் 168.75 ஸ்டிரைக் ரேட்டில் இந்த ரன்களை எட்டினார்.
ஷஃபாலி வர்மா அரைசதம்
ஸ்மிருதி மந்தனா அவுட்டானாலும் அது ஷஃபாலியின் மீது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் தனது அதிரடியைத் தொடர்ந்து 39 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அரைசதமடித்து அவுட்டானார். இந்தியாவின் நம்பர் 3 பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸும் தன் பங்கிற்கு மலேசிய பந்துவீச்சை சிதறடித்து 29 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். இடையில் மழை பெய்ததால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், இந்தியா 15 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்தது. இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய மலேசியா 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், தரவரிசையின்படி இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தானாக தகுதி பெற்றது.