ஆசிய விளையாட்டுப் போட்டி : துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற இந்திய அணிகள்
2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் முறையே தங்கம் மற்றும் வெள்ளியை வென்றனர். துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வரும் நிலையில், ஆடவர் ட்ராப் டீம் நிகழ்வில் கினான் செனாய், ஜோரவர் சந்து மற்றும் பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோர் அடங்கிய அணி தங்கப் பதக்கத்தை வென்றனர். மகளிர் ட்ராப் டீம் போட்டியில் மனிஷா கீர், ராஜேஸ்வரி குமாரி மற்றும் ப்ரீத்தி ரஜக் ஆகியோர் அடங்கிய அணி வெள்ளி வென்றது. முன்னதாக அதிதி அசோக் கோல்ஃப் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளி வென்று வரலாறு படைத்தார். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியின் எட்டாவது நாளை இந்தியா சிறப்புடன் தொடங்கியுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா ஆதிக்கம்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தற்போது வரை 21 பதக்கங்களை துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் பெற்றுள்ளது. இதில் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்கள் அடங்கும். மேலும் 7 தங்கங்களில் 5 தங்க பதக்கங்கள் அணி நிகழ்வில் பெற்றதாகும். ஒட்டுமொத்தமாக இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை 41 பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இதில் 11 தங்கங்கள், 16 வெள்ளி மற்றும் 14 வெண்கல பதக்கங்கள் அடங்கும். மேலும் 11 தங்களில் துப்பாக்கிச் சுடுதலில் பெற்ற 7 தங்கம் தவிர, கிரிக்கெட், டென்னிஸ், குதிரையேற்றம் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளில் தலா ஒரு தங்கப் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.