ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டி அட்டவணை இறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல்
கிரிக்கெட் உலகில் பரம எதிரிகளாக கருதப்படும் இந்திய கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை என இந்த ஆண்டில் மட்டும் குறைந்தபட்சம் இரண்டு முறை நேருக்கு நேர் மோத உள்ளன. இதில், அக்டோபரில் நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பையில், இரு அணிகளும் மோதும் தேதி மற்றும் இடம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பரில் நடக்கும் ஆசிய கோப்பை போட்டி அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. போட்டியை ஹைபிரிட் முறையில் நடத்த ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் எஹ்சான் மசாரி, இந்திய கிரிக்கெட் அணி தங்கள் நாட்டுக்கு விளையாட வரும் என கூறிவருவதற்கு ஐபிஎல் தலைவர் அருண் துமால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் விளையாடுவதை நிராகரித்த ஐபிஎல் தலைவர் அருண் குமார்
பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தகவல்களை நிராகரித்த அருண் துமால், ஆசிய கோப்பை 2023 தொடரில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜகா அஷ்ரப்பை சந்தித்த பின்னர், போட்டி அட்டவணை குறித்து முடிவு எடுக்கப்பட்டதாகவும், பாகிஸ்தானில் நான்கு போட்டிகள் விளையாடப்படும் என்றும், இந்தியா விளையாடும் போட்டிகள் உட்பட எஞ்சிய போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடக்கும் என்றும் தெரிவித்தார். இதன்படி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆசிய கோப்பையில் தங்கள் சொந்த மண்ணில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் மட்டுமே விளையாடும். பாகிஸ்தானில் நடக்கும் இதர போட்டிகள் ஆப்கான், இலங்கை மற்றும் வங்கதேசத்திற்கு இடையே நடக்க உள்ளன.