IND vs PAK : 8 விக்கெட்டுகளை இழந்தவுடன் பாகிஸ்தான் ஆல் அவுட் என அறிவிக்கப்பட்டது ஏன்?
திங்களன்று (செப்டம்பர் 11) நடைபெற்ற ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய போட்டி மழையால் பாதியில் நிறுத்தப்பட்டு, திங்கட்கிழமை மீண்டும் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா (56) மற்றும் ஷுப்மன் கில் (58) ஆகிய இருவரும் அரைசதம் அடித்து வலுவான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி (122) மற்றும் கேஎல் ராகுல் (111) 233 ரன்கள் குவித்ததன் மூலம், 50 ஓவர் முடிவில் 356 ரன்கள் குவித்தது.
குல்தீப் யாதவ் சுழலில் சிக்கிய பாகிஸ்தான்
357 ரன்கள் எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கிடையே, பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டை இழந்து 2 விக்கெட்டுகளை கைவசம் வைத்திருந்த நிலையிலேயே பாகிஸ்தான் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. பாகிஸ்தான் அணியின் பவுலர்களான ஹாரிஸ் ரவூப் மற்றும் நசீம் ஷா இருவரும் பந்துவீச்சின்போது ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்து பேட்டிங்கிற்கு தயார் ஆகாததால்தான் அவர்கள் ஆப்சென்ட் ஹர்ட் என அறிவிக்கப்பட்டு போட்டி முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.