கொழும்பு மைதானத்தில் 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் செப்டம்பர் 10 அன்று நேருக்குநேர் மோத உள்ளன. இரு நாடுகளும் முந்தைய லீக் சுற்றில் மோதிய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த போட்டி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் சூப்பர் 4 போட்டி நடக்கும் நாளன்றும் மழை பெய்ய அதிகம் வாய்ப்புள்ளதால், தற்போது இந்த போட்டிக்கு ரிசர்வ் நாள் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், செப்டம்பர் 11 அன்று மீண்டும் நடத்தப்பட உள்ளது. இதனால் போட்டி நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ள நிலையில், கொழும்பு மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் முந்தைய போட்டிகளின் புள்ளிவிபரங்களை இதில் பார்க்கலாம்.
கொழும்பு மைதானத்தில் இந்திய அணியின் புள்ளி விபரம்
கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா ஸ்டேடியத்தில் 46 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய கிரிக்கெட் அணி 23இல் வெற்றியும், 19இல் தோல்வியும் அடைந்துள்ளது. இருப்பினும், இந்த 46 போட்டிகளில், ஒரே ஒரு போட்டியில் மட்டுமே, அதுவும் 2004இல் நடந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொண்டுள்ளது. அந்த போட்டியில் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங்கில் 78 ரன்கள் எடுத்ததோடு, பந்துவீச்சிலும் சிறந்து விளங்கி 3 விக்கெட்டுகளை எடுத்தார். எனினும், அந்த போட்டியில் இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியது. இந்நிலையில், 19 ஆண்டுகளுக்கு பிறகு, அதே மைதானத்தில் இரு அணிகளும் மீண்டும் மோதும் நிலையில், இந்திய அணி முந்தைய தோல்விக்கு பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.