போட்டியில் வெற்றி பெற்றும் 2 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்த ஆஸ்திரேலியா, காரணம் என்ன?
ஆஷஸ் 2023 தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் தலா 2 புள்ளிகள் குறைக்கப்பட்டன. இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் மெதுவாக பந்துவீசியது கண்டறியப்பட்டது இரு அணிகளும் தங்கள் இலக்கை விட தலா இரண்டு ஓவர்கள் குறைவாக பந்துவீசி இருந்தனர். இதற்காக இரு அணிகளுக்கும் இரண்டு புள்ளிகளை குறைத்ததோடு, போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் துணை ஊழியர்களுக்கும் போட்டிக் கட்டணத்தில் 40 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
ஐசிசி விதியின்படி மெதுவாக பந்துவீசுபவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள்
ஐசிசி விதிப்படி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் மெதுவாக பந்துவீசினால் 2 புள்ளிகள் குறைக்கப்படுவதோடு, ஒவ்வொரு ஓவருக்கும் 20% அபராதம் என அதிகபட்சமாக 100% வரையிலும் அபராதம் விதிக்கப்படும். அபராதம் அணியில் உள்ள வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும். முன்னதாக, 2019-21 முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியிலும், ஆஸ்திரேலிய அணி மெதுவாக பந்துவீசியதால் புள்ளிகளை இழந்த காரணமாகவே கடைசி நேரத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் 2021-23 சுழற்சியின் இறுதிப்போட்டியிலும் மெதுவாக பந்துவீசி அபராதத்தை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் ஆஸ்திரேலியா மோதும் 2வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி தொடங்க உள்ளது.