
டெஸ்டில் 600 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர்; ஸ்டூவர்ட் பிராட் சாதனை
செய்தி முன்னோட்டம்
ஆஷஸ் 2023 தொடரின் நான்காவது போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர், ஸ்டூவர்ட் பிராட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை எட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.
மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்டில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, 37 வயதான ஸ்டூவர்ட் பிராட், 600 விக்கெட்டுகளை எட்டுவதற்கு இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டது.
போட்டியின் முதல் நாளில் (ஜூலை 19) அவர், ஐந்தாவது ஓவரில் உஸ்மான் கவாஜாவின் விக்கெட் மூலம் இங்கிலாந்துக்கு ஒரு தொடக்கத்தை வழங்கினார்.
பின்னர், 48 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஹெட்டின் விக்கெட் மூலம் மதிப்புமிக்க 600 விக்கெட்டுகள் இலக்கை எட்டினார்.
stuart broad test numbers
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராட் புள்ளிவிபரம்
2007 இல், கொழும்பில், இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ஸ்டூவர்ட் பிராட், டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு அதிக விக்கெட் எடுத்தவர்களில் முன்னணியில் உள்ளார்.
ஸ்டூவர்ட் பிராட் தற்போது 166 போட்டிகளில் 20 முறை ஐந்து விக்கெட்டுகள் உட்பட 600 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதற்கிடையே, டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை எடுத்த ஐந்து வீரர்களில் ஒருவராக உள்ள ஸ்டூவர்ட் பிராட், இந்த இலக்கை எட்டிய இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் கொண்டுள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், 600 விக்கெட்டுகள் இலக்கை எட்டிய மற்றொரு வேகப்பந்து வீச்சாளராக, அதே இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளார்.