
ஆஷஸ் 2023 : முதுகு வலியால் அவதிப்படும் ஒல்லி ராபின்சன், இங்கிலாந்துக்கு மேலும் நெருக்கடி
செய்தி முன்னோட்டம்
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் 2023 தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் தற்போது நடைபெற்று வருகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 0-2 என இங்கிலாந்து கிரிக்கெட் அணி பின்தங்கியுள்ள நிலையில், அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஒல்லி ராபின்சன், முதல் நாள் ஆட்டத்தின் போது முதுகு பிடிப்புகாரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸின் 43வது ஓவரின்போது பந்துவீசிய ராபின்சன், கேப்டன் ஸ்டோக்ஸிடம் முதுகுப் பிரச்சினை குறித்து சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர், அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். ராபின்சன் பேட்டிங் செய்ய தகுதியானவர் என்று தற்போது தெரிவிக்கப்பட்டாலும், அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசுவது குறித்து இன்னும் சந்தேகம் நீடிக்கிறது.
ollie robinson possibility to comeback
ஒல்லி ராபின்சன் மீண்டு வருவாரா?
ஒல்லி ராபின்சன் முந்தைய ஆஷஸ் தொடரின் ஹோபர்ட் டெஸ்டிலும் முதுகு வலியால் அவதிப்பட்டார். அப்போதைய பந்துவீச்சு பயிற்சியாளர் ஜான் லூயிஸ் அவரது உடற்தகுதியை மேம்படுத்தும்படி பகிரங்கமாக வலியுறுத்தினார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் முதுகுவலியால் ஒல்லி ராபின்சன் அவதிப்படும் நிலையில், இங்கிலாந்து இப்போது ராபின்சனுடன் கவனமாக இருக்க வேண்டும்.
அவரது முதுகில் இன்னும் கொஞ்சம் அழுத்தம் இருந்தால் முழு ஆஷஸிலும் அவர் வெளியேறும் நிலை உருவாகும்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு சுருண்ட நிலையில், இங்கிலாந்தும் தற்போது 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.
இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து தற்போது பந்துவீச வேண்டி உள்ளதால், ராபின்சனை அதிகம் பயன்படுத்த முடியாமல் இங்கிலாந்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.