ஆஷஸ் 2023 : ஐந்து நாட்களும் பேட்டிங் செய்து ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா சாதனை
இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடந்து வரும் ஆஷஸ் 2023 தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா ஐந்து நாட்களிலும் பேட்டிங் செய்து புதிய சாதனை படைத்துள்ளார். போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் நாளில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்தபோது டிக்ளர் செய்தது. இதையடுத்து முதல் நாளிலேயே ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அதில் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா முதல் நாளில் களமிறங்கி மூன்றாவது நாள் வரை பேட்டிங் செய்து 324 பந்துகளில் 141 ரன்கள் எடுத்தார். மூன்றாவது நாளில் ஆஸ்திரேலியா 386 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
உஸ்மான் கவாஜா செயல்திறன்
மூன்றாவது நாளில் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து நான்காம் நாளில் 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் 281 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்காம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. ஐந்தாம் நாளில் வெற்றி பெற 174ரன்கள் தேவை எனும் நிலையில் ஆஸ்திரேலிய அணி தொடங்கி விளையாடி வருகிறது. இந்நிலையில், போட்டியின் ஐந்து நாட்களிலும் பேட்டிங் செய்து உஸ்மான் கவாஜா, இதை செய்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பாக 1980 ஆஷஸின் லார்ட்ஸ் டெஸ்டின் போது கிம் ஹியூஸ் இந்த சாதனையை செய்திருந்தார். அவர் முதல் இன்னிங்சில் 117 மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 84 ரன்களை எடுத்தார்.