
எல்லாம் பித்தலாட்டம்; ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அர்ஷத் நதீமிற்கு நிலம் வழங்குவதாக கூறி ஏமாற்றிய பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீம், பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து விரக்தியடைந்துள்ளார். தனிநபர் ஒலிம்பிக் தங்கம் வென்ற முதல் பாகிஸ்தானிய தடகள வீரரான அர்ஷத் நதீம், 92.97 மீட்டர் தூரம் எரிந்து தங்கப் பதக்கம் வென்ற பிறகு தனக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பல நிலப் பரிசுகள் ஒருபோதும் வழங்கப்படவில்லை என்று கூறினார். ஜியோ டிவியிடம் பேசிய அர்ஷத் நதீம், "அனைத்து அறிவிப்புகளும் போலியானவை. எனக்கு அறிவிக்கப்பட்ட ரொக்கப் பரிசுகள் மட்டுமே கிடைத்தன" என்றார். இந்தியாவின் நீரஜ் சோப்ராவை விட நதீம் சிறப்பாக செயல்பட்டிருந்தார். இதில் நீரஜ் 89.45 மீட்டர் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
காயம்
காயத்திற்கு சிகிச்சை
தொடை தசைநார் காயத்திலிருந்து தற்போது மீண்டு வரும் அர்ஷத் நதீம், ஆகஸ்ட் 16 ஆம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிலேசியா டயமண்ட் லீக்கிற்கு முன்னதாக சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்கிறார். டயமண்ட் லீக்கில் அவர் மீண்டும் நீரஜ் சோப்ராவை எதிர்கொள்ள உள்ளார். இந்த காயம் காரணமாக நதீம் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் ஒரு போட்டியைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதை தடகள வீரருக்கு நெருக்கமான ஒருவர் உறுதிப்படுத்தினார். வரவிருக்கும் டயமண்ட் லீக் போட்டி உலக கவனத்தை ஈர்த்து வருகிறது, ஏனெனில் இது நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான (நதீம்) மற்றும் நடப்பு உலக சாம்பியனான (சோப்ரா) இடையேயான மறு போட்டியாகும்.