உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்கவைத்த முதல் இந்தியர்: வரலாறு படைத்தார் அனுபமா ராமச்சந்திரன்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சம்மேளனத்தின் (IBSF) உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய வீராங்கனை அனுபமா ராமச்சந்திரன் தொடர்ந்து இரண்டாவது முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். சனிக்கிழமையான நேற்று (நவம்பர் 21) நடைபெற்ற பரபரப்பான மகளிர் இறுதிப்போட்டியில், ஹாங்காங் வீராங்கனை சோ மேன் யானை (So Man Yan) 3-1 என்ற பிரேம் கணக்கில் வீழ்த்தி அனுபமா தனது பட்டத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டார். இதன் மூலம், உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு முறை பட்டம் வென்ற (Back-to-back crowns) முதல் இந்திய வீராங்கனை என்ற அரிய பெருமையை அவர் பெற்றுள்ளார்.
வெற்றி வாகை சூடிய அனுபமா
முதல் பிரேமில் சறுக்கினாலும் அபாரமாக மீண்டு வெற்றி வாகை சூடிய அனுபமா
இறுதிப்போட்டியின் முதல் பிரேமில் சற்றுத் தடுமாறித் தோல்வியடைந்த அனுபமா, இரண்டாவது பிரேமிலிருந்து தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி ஆட்டத்தைத் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
இரண்டாவது பிரேமில் 31, 19 மற்றும் 16 புள்ளிகள் எடுத்து ஆட்டத்தை 1-1 எனச் சமன் செய்த அவர், மூன்றாவது பிரேமில் 16, 28 மற்றும் 18 புள்ளிகளுடன் 2-1 என முன்னிலை பெற்றார்.
நான்காவது பிரேமில் சோமேன்யான் 20 புள்ளிகளுடன் வலுவாகத் தொடங்கினாலும், அனுபமா 14 மற்றும் 26 புள்ளிகள் குவித்ததோடு, கடைசி நேரத்தில் நீல நிறப் பந்தையும் இளஞ்சிவப்புப் பந்தையும் துல்லியமாகப் பாக்கெட்டில் தள்ளி 3-1 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் அனுபமாவுக்கு 4,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
ஆடவர் பிரிவில் அத்வானிக்கு வெண்கலம்
சொந்த மண்ணில் பட்டத்தை தக்கவைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி
வரலாற்று வெற்றிக்குப் பிறகு பேசிய அனுபமா ராமச்சந்திரன், "ஒரு பட்டத்தை வெல்வதே தனிச்சிறப்பு, ஆனால், அந்தப் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வது அதனினும் சிறப்பு வாய்ந்தது.
அதிலும் சொந்த மண்ணான இந்தியாவில் இதனைச் சாதித்திருப்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இதற்கிடையில், ஆடவர் பிரிவு இறுதிப்போட்டியில் ஈரான் வீரர் அலி கராகோஸ்லோ 5-1 என்ற கணக்கில் ஹாங்காங்கின் டாம் யுன் ஃபங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் 10,000 டாலர் பரிசுத்தொகையையும் வென்றார்.
முன்னதாக அரையிறுதியில் அலி கராகோஸ்லோவிடம் 3-5 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய நட்சத்திர வீரர் பங்கஜ் அத்வானி வெண்கலப் பதக்கம் வென்றார்.