டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்களை கடந்த மூன்றாவது இலங்கை வீரர் : ஏஞ்சலோ மேத்யூஸ் சாதனை
நியூசிலாந்துக்கு எதிராக ஹேக்லி ஓவலில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை ஆல்ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூஸ் 47 ரன்களை எடுத்தார். இதன் மூலம் இலங்கையின் சனத் ஜெயசூர்யாவை (6,973 ரன்கள்) பின்னுக்குத் தள்ளி டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்களை கடந்த மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை மேத்யூஸ் பெற்றுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை கிரிக்கெட் அணியை பொறுத்தவரை குமார் சங்கக்கார (12,400 ரன்கள்) மற்றும் மஹேல ஜெயவர்த்தன (11,814 ரன்கள்) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். தற்போது இவர்களுக்கு அடித்தபடியாக ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏஞ்சலோ மேத்யூஸ் புள்ளிவிபரங்கள்
மேத்யூஸ் 101 டெஸ்ட் போட்டிகளில் 45.16 என்ற சராசரியில் 7,000 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 13 சதங்கள் மற்றும் 38 அரைசதங்கள் அடங்கும். இலங்கையின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான மேத்யூஸ் உள்நாட்டில் 59 டெஸ்டில் 43.33 சராசரியில் 3,640 ரன்களை எடுத்துள்ளார். அதே சமயம் 2,773 ரன்களை வெளிநாட்டு டெஸ்டில் 44.01 என்ற சராசரியில் எடுத்துள்ளார். நடுநிலையான மைதானங்களில் 6 போட்டிகளில் விளையாடி 587 ரன்கள் எடுத்துள்ளார். அவர் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிராக முறையே 1,458 மற்றும் 1,051 ரன்களை எடுத்துள்ளார். மேத்யூஸ் நியூசிலாந்துக்கு எதிராக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஏழு அரைசதம் உட்பட 886 ரன்கள் எடுத்துள்ளார்.