27 வயதிலேயே டென்னிஸிலிருந்து ஓய்வை அறிவித்தார் பிரபல வீராங்கனை அனெட் கொன்டவீட்
உலகின் முன்னாள் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனையான அனெட் கொன்டவீட், வரும் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எஸ்டோனிய நாட்டைச் சேர்ந்த 27 வயதே ஆன அனெட் கொன்டவீட்டின் இந்த அறிவிப்பு டென்னிஸ் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இரண்டு வருடங்களாக தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வருவதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அப்பதிவு மூலம் அவர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். டபிள்யூடிஏ சர்க்யூட்டில் மிகவும் திறமைசாலியான அனெட், இதுவரை ஆறு டபிள்யூடிஏ பட்டங்களை வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை பொறுத்தவரை அதிகபட்சமாக 2020 ஆஸ்திரேலிய ஓபனில் காலிறுதி வரை எட்டியுள்ளார். மேலும் கிராண்ட்ஸ்லாமில் 36 வெற்றிகளையும் 31 தோல்விகளையும் கொண்டுள்ளார்.