Page Loader
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஃபிரான்சைஸ் லீக்கை தியாகம் செய்ய தயாராகும் ஆண்ட்ரே ரஸ்ஸல்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஃபிரான்சைஸ் லீக்கை தியாகம் செய்ய தயாராகும் ஆண்ட்ரே ரஸ்ஸல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஃபிரான்சைஸ் லீக்கை தியாகம் செய்ய தயாராகும் ஆண்ட்ரே ரஸ்ஸல்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 20, 2023
12:33 pm

செய்தி முன்னோட்டம்

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஃபிரான்சைஸ் லீக் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதில் மும்முரம் காட்டி வரும் ஆண்ட்ரே ரஸ்ஸல், தனது வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கடைசியாக 2021 இல் விளையாடினார். ஃபிரான்சைஸ் லீக்கில் மட்டுமே கவனம் செலுத்தியதால், 2022 டி20 உலகக்கோப்பைக்கான அணியில் அவர் புறக்கணிக்கப்பட்டார். இதற்கிடையே, டி20 உலகக்கோப்பையில் படுதோல்வி அடைந்து வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்கும் தகுதியை இழந்துவிட்டது. இது மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆண்ட்ரே ரஸ்ஸல் மீண்டும் அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட, ஓரிரு ஃபிரான்சைஸ் லீக்குகளை தவறவிடுவதில் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என மேலும் கூறியுள்ளார்.

andre russell eager to play against india

இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட ஆண்ட்ரே ரஸ்ஸல் விருப்பம்

வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெறுவது குறித்து ஜமைக்கா அப்சர்வருக்கு அளித்த பேட்டியில், "நான் அடுத்த உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். அதனால் அவர்கள் என்னை அணியில் சேர்க்க முடிந்தால் அது எனக்கு சிறப்பாக இருக்கும்." என்று கூறினார். மேலும், "இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 தொடர் வருகிறது. இதில் ஒரு அங்கமாக இருக்க நான் விரும்புகிறேன். ஆனால் யாரும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்." என்று அவர் கூறினார். வெஸ்ட் இண்டீஸில் இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில், இது முடிந்த பிறகு மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.