INDvsSA முதல் டி20: சஞ்சு சாம்சன் அதிரடியால் இந்தியா அபார வெற்றி
டர்பனில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) நடைபெற்ற இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 107 ரன்கள் எடுத்தார். இது டி20 கிரிக்கெட்டில் அவரது இரண்டாவது சதமாகும். இதற்கிடையே, சூர்யகுமார் யாதவ் 21 ரன்களும், திலக் வர்மா 33 ரன்களும் சேர்த்த நிலையில், இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் சேர்த்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜெரால்டு கோட்சீ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய பந்துவீசசு அபாரம்
203 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக கேப்டன் ஐடன் மார்க்ரம் முதல் ஓவரிலேயே அவுட்டானார். அவரைத் தொடர்ந்து வந்த இதர வீரர்களும் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். அந்த அணியில் அதிகபட்சமாக ஹென்றிச் கிளாசன் 25 ரன்கள் சேர்த்தார். இதற்கிடையே, 17.5 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி மற்றும் ரவி பிஸ்னோய் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.