மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் அக்டோபர் 30 அன்று இந்தியா ஆஸ்திரேலியாவுடன் மோதல்
செய்தி முன்னோட்டம்
மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 25) நடந்த போட்டியில், ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. இந்தப் வெற்றியின் மூலம், ஆஸ்திரேலியா புள்ளிப் பட்டியலில் 13 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்ததுடன், வரும் அக்டோபர் 30 அன்று நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. இந்தப் போட்டியின் கதாநாயகியாகச் சுழற்பந்து வீச்சாளர் அலானா கிங் இருந்தார். முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்த தென்னாப்பிரிக்கா, லாரா வோல்வார்ட்ஸ் (31) அதிரடி ஆட்டத்தால் நிலையான தொடக்கத்தைப் பெற்றிருந்தாலும், கிங் தனியொருவராகப் போட்டியின் போக்கையே மாற்றினார்.
7 விக்கெட்டுகள்
அலானா கிங் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
அவர் இந்தத் தொடரின் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சுப் புள்ளிவிவரங்களைப் பதிவுசெய்தார். வெறும் ஏழு ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை 24 ஓவர்களில் வெறும் 97 ரன்களுக்குள் சுருட்டினார். ஆஸ்திரேலியா இலக்கைத் துரத்தியபோது, ஆரம்பத்தில் 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், அனுபவம் வாய்ந்த பெத் மூனி (42) மற்றும் ஜார்ஜியா வால் (38 நாட் அவுட்) ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலியா 33.1 ஓவர்கள் மீதமிருக்க இலக்கை எளிதாக எட்டியது. 2017 ஆம் ஆண்டிலிருந்து மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் தோல்வியடையாத ஓட்டத்தை இந்த வெற்றி நீட்டிக்கிறது.