'கிரிக்கெட் வீரர்கள் நண்பர்களாக இருக்க வேண்டியதில்லை' : அஸ்வினின் கருத்துக்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதில்
கடந்த வாரம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தோல்விக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சர்ச்சைக்குரிய வகையில் விளையாடும் லெவனில் இருந்து நீக்கப்பட்ட அஸ்வின் ரவிச்சந்திரன் இந்த போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டையும் எடுத்தார். முன்னதாக, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு அஸ்வின் அளித்த ஒரு பேட்டியில், இந்திய அணியில் முன்பு இருந்ததை போல் வீரர்கள் நண்பர்களாக இல்லை என்றும், சக ஊழியர் போன்று நடந்து கொள்வதாகவும் கூறியிருந்தார்.
அஸ்வினின் கருத்து குறித்து ஆகாஷ் சோப்ரா பேச்சு
அஸ்வினின் கருத்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவின் நட்சத்திர இளம் வீரர் பிருத்வி ஷா சமீபத்தில் அளித்த பேட்டியிலும், இதே கருத்தை உறுதிப்படுத்தி பேசியதால், இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் இது குறித்து கூறுகையில், " களத்திற்கு வெளியே நண்பர்களாக இருக்க வேண்டியதில்லை. களத்தில் தங்கள் 100 சதவீதத்தை கொடுக்கும் உறுதியுடன் இருந்தால் மட்டும் போதும். 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அப்படித்தான் இருந்தனர். அதே நேரம் களத்திற்குள் சென்றால் ஒருங்கிணைந்து தான் செயல்படுவர்." என்று கூறியுள்ளார்.