இந்திய அணியின் தேர்வுகுழு தலைவராக அஜித் அகர்கரை நியமிக்க பிசிசிஐ திட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் பதவிக்கு முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கரை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான சேத்தன் ஷர்மா, பிப்ரவரி 2023 இல் சர்ச்சையில் சிக்கியதை அடுத்து பதவி விலகினார். அப்போது முதல் தலைமை தேர்வாளர் பதவி காலியாக உள்ள நிலையில், தேர்வுக்குழு தலைவர் பதவிக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வெளியிட்டது. விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை 1ம் தேதி நேர்காணல் நடைபெறும். இந்த பதவிக்கு பலரும் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களில் அகர்கருக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 45 வயதான அகர்கர் 2007இல் டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் ஒருவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக அமோல் மஜும்தாருக்கு வாய்ப்பு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கான நேர்காணல் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) நடைபெற உள்ளது. இதில் அமோல் மஜும்தார் நல்ல பொருத்தமான தேர்வாக இருக்கும் என்று பிசிசிஐ நினைக்கிறது. இது தொடர்பாக பேசிய பிசிசிஐ அதிகாரி, "வெள்ளிக்கிழமை நேர்காணல் நடத்தப்படும். அணிக்கு புதிய யோசனைகள் உள்ள ஒருவர் தேவை. அமோல் போன்ற ஒருவர் வீராங்கனைகளை முன்னெடுத்துச் செல்ல சரியான நபர். அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கு முன் அணியை மேம்படுத்துவதில் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்குவார் என நம்புகிறேன்." எனத் தெரிவித்துளளார். அமோல் மஜும்தார் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்றாலும், அவர் ஒரு சிறந்த முதல் தர வீரர் மற்றும் 171 போட்டிகளில் 11,000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.