தொடர் தோல்விகளால் பின்னடைவு; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் என்ன?
புனேவில் நடந்து முடிந்த இந்தியா vs நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவியது. இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தோற்று 0-2 என தொடரை இழந்துள்ளது. இந்த தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சியில் இந்தியாவின் நிலையை பாதித்துள்ளது. இந்த தொடர் தொடங்கும் முன் 70 ரேட்டிங் புலிகளுக்கும் மேல் கொண்டு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. தற்போதைய தொடர் தோல்விகளுக்கு பிறகும், இந்தியா முதலிடத்தை தக்கவைத்தாலும், 62.82 ஆக ரேட்டிங் புள்ளிகள் குறைந்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா 62.50 ரேட்டிங் புள்ளிகள் கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் நிலை ஆட்டம் கண்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 சுழற்சி
இந்திய அணிக்கு பின்னடைவு இருந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான போட்டியில் இந்தியா இன்னும் வலுவான இடத்தில் உள்ளது. ஆனால் கூடவே சவாலையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியாவுக்கு இந்த சுழற்சியில் இன்னும் ஆறு போட்டிகள் உள்ளன. இதில் நியூசிலாந்திற்கு எதிராக மேலும் ஒரு போட்டி மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஐந்து போட்டிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற, இந்தியா இந்த ஆறு போட்டிகளில் நான்கு வெற்றிகளையும் ஒரு டிராவையும் பெற வேண்டும். அப்போது 65.79 ரேட்டிங் புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்யும். இதில் மாற்றம் இருந்தால், மற்ற அணிகளின் போட்டிகளில் ஏற்படும் வெற்றி, தோல்விகளை சார்ந்து முடிவுகள் மாறும்.