
நேபாளத்தை வீழ்த்தியதைப் போல் இந்தியாவையும் வீழ்த்துவோம்; பாபர் அசாம் நம்பிக்கை
செய்தி முன்னோட்டம்
புதன்கிழமை (ஆகஸ்ட் 30) நேபாளத்திற்கு எதிரான மிகப்பெரும் வெற்றியுடன் ஆசிய கோப்பை 2023 தொடரை தொடங்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அடுத்து செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.
இந்நிலையில், நேபாளத்திற்கு எதிரான போட்டிக்கு பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், இந்த வெற்றி இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களுடன் தடுமாறியபோது பாபர் அசாம், இப்திகார் அகமதுவுடன் சேர்ந்து அணியை மீட்டெடுத்தார்.
இதில் பாபர் அசாம் 151 ரன்கள் குவித்த நிலையில், இப்திகார் அகமது 109 ரன்களுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
babar azam confident to beat india like nepal
ஆரம்பத்தில் பேட்டிங்கில் தடுமாறியது குறித்து விளக்கிய பாபர் அசாம்
முதல் 7 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறிய நிலையில், பாபர் அசாம் முகமது ரிஸ்வானுடன் இணைந்து அணியை மீட்டெடுக்கும் முயற்சியை தொடங்கினார்.
இது குறித்தும் பேசிய அவர், "நான் உள்ளே சென்றபோது, பந்து சரியாக வரவில்லை. அதனால் நான் ரிஸ்வானுடன் ஒரு இன்னிங்ஸை உருவாக்க முயற்சித்தேன். இப்திகார் உள்ளே வந்ததும், நான் அவருடைய இயல்பான ஆட்டத்தை விளையாடச் சொன்னேன்.
இரண்டு-மூன்று பவுண்டரிகளை அடித்த பிறகு அவர் வசதியாக உணர்ந்தார்." என்றார்.
இந்தியாவுக்கு எதிரான கடுமையான போட்டிக்கு முன்னதாக, இது தங்களுக்கு ஒரு சிறந்த தயாரிப்பாக இருந்தது என்றும், இந்திய கிரிக்கெட் அணியை எதிர்க்கும்போதும் இதேபோல் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது என்றும் மேலும் கூறினார்.