
ராணுவ தாக்குதலில் 3 கிரிக்கெட்டர்கள் உயிரிழப்பு; பாகிஸ்தானில் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரிலிருந்து ஆப்கானிஸ்தான் விலகல்
செய்தி முன்னோட்டம்
ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தில் நடந்த அண்மைய எல்லைத் தாக்குதல்களில் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான வரவிருக்கும் முத்தரப்புத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. "இந்தப் பயங்கரமான சம்பவத்திற்குப் பதிலளிக்கும் விதமாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், நவம்பர் இறுதியில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் இடம்பெற்ற முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்பதிலிருந்து விலக முடிவு செய்துள்ளது." என்று ACB எக்ஸ் தளத்தில் இரங்கல் அறிக்கையுடன் அறிவித்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் (PCB) ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் தொடர், நவம்பர் 17 முதல் 29 வரை ராவல்பிண்டி மற்றும் லாகூரில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல்
தாக்குதலில் சிக்கியது எப்படி?
சரணாவில் நடந்த நட்புரீதியான போட்டியை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் இந்தக் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானின் கோழைத்தனமான தாக்குதலில் சிக்கியதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டது. இந்த விலகல், திட்டமிடப்பட்ட முத்தரப்புத் தொடரைச் சீர்குலைத்துள்ளது. இந்தத் தொடரில் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இரண்டு முறை மோதவிருந்தன. இந்தத் தொடர், நடப்பாண்டில் இரு நாடுகளுக்கும் இடையேயான இரண்டாவது முத்தரப்புத் தொடராக இருந்தபோதிலும், ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மண்ணில் விளையாடும் முதல் தொடராக அமைந்திருக்கும். இதற்கிடையே, ஆப்கானிஸ்தானின் இந்த விலகல் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது.