2025 ஆசிய கோப்பை மீண்டும் டி20 வடிவத்தில் நடத்தப்படும் என அறிவிப்பு
ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாக நடந்த ஆசிய கோப்பை 2023 தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடந்தது. ஆனால், 2025இல் நடக்கும் ஆசிய கோப்பையின் அடுத்த சீசன் டி20 வடிவத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 பிப்ரவரி மற்றும் மார்ச்சில் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள டி20 உலகக்கோப்பைக்கு அணிகளைத் தயார்படுத்துவதற்காக ஆசியக் கோப்பை 2025ஐ டி20 வடிவத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. டி20 உலகக்கோப்பை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அந்த ஆண்டு அல்லது வரும் ஆண்டு எந்த உலகக்கோப்பை நடைபெறுகிறதோ, அதே வடிவத்தில் ஆசிய கோப்பையும் வடிவமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பையின் வரலாறு மற்றும் வடிவம்
ஆசியக் கோப்பை 1984இல் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் தொடங்கியது. ஆனால் டி20 கிரிக்கெட் போட்டிகளின் தொடக்கத்திற்குப் பிறகு இது மாறியது. கடைசியாக நடந்த 2022 ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் நடைபெற்றது. இதற்கு காரணம் அதே ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஆசியக் கோப்பையின் நோக்கம் அனைத்து முன்னணி ஆசிய அணிகளையும் ஒன்றிணைப்பதாக இருந்தது. ஆனால், இப்போது அது உலகக்கோப்பை ஆயத்த நிகழ்வாக மாறியுள்ளது. உலகக் கோப்பை நடக்கும் அதே ஆண்டு ஆசிய கோப்பை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆசிய கோப்பையை பொறுத்தவரை 8 பட்டங்களை வென்ற இந்திய அணி மிகவும் வெற்றிகரமான அணியாக உள்ளது.