எமெர்ஜிங் ஆசிய கோப்பை 2023 : இந்திய ஏ அணி முதல் போட்டியில் அபார வெற்றி
ஏசிசி ஆடவர் எமெர்ஜிங் ஆசிய கோப்பை 2023 ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா ஏ அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏ அணியை எதிர்கொண்டு எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற இந்தியாவின் கேப்டன் யாஷ் துல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆர்யன்ஷ் ஷர்மா, கேப்டன் வால்தபா சிதம்பரம் மற்றும் முகமது ஃபராசுதீன் ஆகியோர் முறையே 38, 46 மற்றும் 35ரன்கள் எடுத்தனர். இறுதியில் 50ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் ஹர்ஷித் ராணா அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, நிதிஷ் ரெட்டி மற்றும் மாணவ் சுதர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் அபார சதம்
எளிமையான இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்சன் 8 ரன்களிலும், அபிஷேக் ஷர்மா 19 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது . எனினும் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த நிகின் ஜோஸ் மற்றும் கேப்டன் யாஷ் துல் இந்திய அணியை மீட்டெடுத்தனர். இருவரும் கடைசி வரை அவுட் ஆகாமல் 26.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இதில் கேப்டன் யாஷ் துல் 84 பந்துகளில் 20 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 108 ரன்கள் எடுத்த நிலையில், மறுமுனையில் இருந்து ஜோஸ் 53 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்களை எடுத்தார்.