சூர்யகுமார் யாதவ் சாதனையை தகர்த்த அபிஷேக் சர்மா! 2026-இல் 69 சிக்ஸர்கள் விளாசி புதிய உலக சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் மற்றும் உலக அளவிலான சாதனையாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் ஷமர் ஸ்பிரிங்கர் வீசிய 9-வது ஓவரில் சிக்ஸர் அடித்ததன் மூலம், 2026-ஆம் ஆண்டில் தனது 69-வது சிக்ஸரைப் பதிவு செய்து அவர் இந்த சாதனையை எட்டினார்.
சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவை முந்திய இளம் புயல்
இதற்கு முன் இந்திய டி20 அணியின் முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 2022-ஆம் ஆண்டில் 68 சிக்ஸர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அதைத் தற்போது அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார்.
சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமான முதலே சிக்ஸர் மழை பொழியும் இயந்திரமாக செயல்பட்டு வரும் அபிஷேக் சர்மா, இதுவரை 68 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடி 102 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
மேலும் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இஷான் கிஷன் (52 சிக்ஸர்கள்) மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் (45 சிக்ஸர்கள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றி
வரலாற்று சாதனை படைத்தபோதிலும், 4-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 24 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 247/3 என்ற இமாலய ரன் குவித்து அசத்தியது.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் மீண்டும் ஒரு அபார சதம் விளாசி அணிக்கு வலுசேர்த்தார்.
கடின இலக்கை நோக்கி ஆடிய இந்திய கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சன் 56 ரன்கள் அடித்த போதிலும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால் இந்தியா 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கடைசி போட்டி
சின்னசாமி மைதானத்தில் கடைசி போட்டி
இந்திய அணியின் இந்த தோல்வியால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான தொடரைத் தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி அக்டோபர் 17 அன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதிக ரன்கள் குவிக்கும் மைதானமாகக் கருதப்படும் சின்னசாமியில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்ற இரு அணிகளும் தீவிரமாக மோதும் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.