சூர்யகுமார் யாதவ் உலக சாதனையை உடைத்த அபிஷேக் சர்மா: டி20-யில் புதிய மைல்கல்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச டி20 கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா புதிய உலக சாதனையைப் படைத்து வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 3-வது டி20 போட்டியில், சர்வதேச டி20 போட்டிகளில் எதிர்கொண்ட பந்துகளின் அடிப்படையில் அதிவேகமாக 2,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவின் உலக சாதனையை முறியடித்துள்ளார். 26 வயதான இடதுகை ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா, வெறும் 1,024 பந்துகளிலேயே 2,000 சர்வதேச டி20 ரன்களை குவித்துள்ளார். முன்னதாக 2023 டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் 1,164 பந்துகளில் 2000 ரன்களை கடந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ருத்ரதாண்டவம்
18 பந்துகளில் அரைசதம்
மைல்கல்லை எட்டிய கையோடு தனது அசுரத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அபிஷேக், வெறும் 18 பந்துகளில் அரைசதம் விளாசி மைதானத்தை அதிர வைத்தார்.
ரோஸ்டன் சேஸ், ஷமர் ஸ்பிரிங்கர், ஷமர் ஜோசப் ஆகியோரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த அவர், கவர் மற்றும் மிட்-விக்கெட் திசைகளில் சிக்ஸர் மழையைப் பொழிந்தார்.
இது சர்வதேச டி20 போட்டிகளில் அபிஷேக் சர்மாவின் 14-வது அரைசதமாகும்.
சஞ்சு சாம்சன் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்த போதிலும், இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா வெறும் 20 பந்துகளில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இரண்டாவது விக்கெட்டுக்கு 108 ரன்கள் குவித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
மிரட்டல் பேட்டிங்
30 பந்துகளில் 69 ரன்கள் விளாசல்
இப்போட்டியில் மொத்தம் 30 பந்துகளை மட்டுமே சந்தித்த அபிஷேக் சர்மா, 6 பவுண்டரிகள் மற்றும் 5 இமாலய சிக்ஸர்களுடன் 69 ரன்களைக் குவித்து மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
இறுதியாக 10-வது ஓவரில் ஷமர் ஸ்பிரிங்கரின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அபிஷேக் தனது அதிரடி ஆட்டத்தை முடித்துக் கொண்டார். அவரது இந்த மிரட்டலான பேட்டிங் இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்டப் பேருதவியாக அமைந்தது.