தலைசிறந்த டி20 கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் தான் : முன்னாள் கிரிக்கெட்டர் ஏபி டி வில்லியர்ஸ்
டி20 கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த வீரர் ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் தான் என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கில் தனது செயல்பாட்டிற்குப் பிறகு புகழ் பெற்ற ரஷீத் கான், சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானின் எழுச்சிக்கு ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சூப்பர்ஸ்போர்ட்க்கு டி வில்லியர்ஸ் அளித்த பேட்டியில், தலைசிறந்த சிறந்த டி20 வீரர் யார் என கேட்கப்பட்டதற்கு, ஜாம்பவான்கள் விராட் கோலி மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோரை எல்லாம் குறிப்பிடாமல், ரஷீத் கான் தான் சிறந்த வீரர் என பாராட்டினார்.
ரஷீத் கான் கிரிக்கெட் புள்ளி விபரங்கள்
ரஷீத் கான் 2017 இல் ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் சேர்ந்தார். மேலும் தனது முதல் சீசனில் 14 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி வலுவான தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் 2017 மற்றும் 2021 இல் சன்ரைசர்ஸ் அணியில் இருந்த காலத்தில் மொத்தம் 93 விக்கெட்டுகளை எடுத்தார். கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்த ரஷீத் கான், அதில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த அணி தனது முதல் பட்டத்தை பெற உதவினார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 77 போட்டிகளில் 126 விக்கெட்டுகளுடன் டி20 போட்டிகளில் மூன்றாவது அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சிறப்பையும் கொண்டுள்ளார்.