"கோலி-அனுஷ்கா ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளது என தவறாக கூறிவிட்டேன்": அந்தர் பல்டி அடித்த டிவிலியர்ஸ்
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஜோடி தங்களது 2வது குழந்தையை எதிர்பார்க்கிறார்கள் என்று இரு தினங்களுக்கு முன்னர் கூறியிருந்த ஏபி டிவிலியர்ஸ் தற்போது அதை இல்லை என மறுத்துள்ளார். நடிகை அனுஷ்கா, கர்ப்பமாக இருப்பதாக பல நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தது. அதற்கேற்றாற்போல, கோலியும் நடைபெற்று வரும் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. 'தனிப்பட்ட காரணம்' என பிசிசிஐ குறிப்பிட்டிருந்த நிலையில், கோலியின் நண்பரும், தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரருமான ஏபி டிவிலியர்ஸ், ஒரு பேட்டியில் உண்மையை உளறிவிட்டார். டிவிலியர்ஸ், கோலி இரண்டு போட்டிகளில் பங்குபெறாத காரணத்தால், அவரை தொடர்பு கொண்டதாகவும், அப்போது கோலியே இந்த சந்தோஷ செய்தியை தன்னுடன் பகிர்ந்து கொண்டதாகவும் கூறினார்.
தனிப்பட்ட வாழ்க்கையை பெரிதும் பாதுகாக்கும் விராட்-அனுஷ்கா ஜோடி
விராட் கோலி- அனுஷ்கா ஜோடி தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாக வைத்திருப்பதை விரும்பும் நபர்கள். தங்கள் முதல் குழந்தை வாமிகாவின் புகைப்படம் எக்காரணம் கொண்டும் வெளிஉலகிற்கு கசியக்கூடாது என்பதில் இன்று வரை உறுதியாக உள்ளனர். அதனால், டிவிலியர்ஸ் தங்களுடைய இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்ததை இருவரும் விரும்பி இருக்கமாட்டார்கள் என செய்திகள் தெரிவித்தன. அதன் தொடர்ச்சியாகவே தற்போது டிவிலியர்ஸ், தான் தவறு செய்துவிட்டதாக கூறியுள்ளார். விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினரின் 2ஆவது குழந்தை செய்தியில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார். குடும்பம் தான் முதலில் முக்கியம். அதன் பிறகு தான் கிரிக்கெட் என கோலி தெரிவித்ததை தான் தவறாக புரிந்துகொண்டதாக கூறியுள்ளார்.