டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்து இந்திய வீரர் அஸ்வின் சாதனை; குவியும் பாராட்டுகள்
டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் புதிய சாதனை படைத்துள்ளார். ராஜ்கோட்டில் நடந்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், ஜாக் க்ராவ்லியின் விக்கெட்டை வீழ்த்தி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார் அஸ்வின். இவரின் இந்த சாதனைக்கு, முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் தனுஷ் உட்பட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அஸ்வின், கடந்த விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியிலேயே இந்த சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பு தவறியது. இந்த நிலையில் தான், ராஜ்கோட்டில் முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து விளையாடி வரும் இந்த நேரத்தில், அஸ்வின் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
ஜாக் க்ராவ்லி மற்றும் பென் டக்கெட் கூட்டணியை முறியடித்து சாதனை
முதல் இன்னிங்சில், இங்கிலாந்து அணியின், ஜாக் க்ராவ்லி மற்றும் பென் டக்கெட் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். அதில் பென் டக்கெட் அரைசதம் கடந்த நிலையில், ஜாக் க்ராவ்லி, 15 ரன்கள் எடுத்திருந்தார். அந்த கூட்டணியை உடைக்க வேண்டி, அஸ்வின் பந்து வீச்சில் இறங்கினார். அதன்படி, தனது இரண்டாவது ஓவரில் ஜாக் க்ராவ்லி வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் என்ற சாதனையை படைத்தார். தன்னுடைய 98-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம், குறைந்த போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.