22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்; ரஃபேல் நடால் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
தலைசிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரஃபேல் நடால் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள ஒரு உணர்ச்சிகரமான வீடியோவில், 22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அவர், எல்லா காலத்திலும் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு வீரர்களில் ஒருவராக தனது அந்தஸ்தை வளர்த்துக் கொண்ட விளையாட்டிலிருந்து விடைபெறுவதாக உணர்ச்சியுடன் கூறியுள்ளார். நவம்பரில் நடக்க உள்ள ஸ்பெயினுக்கான டேவிஸ் கோப்பை இறுதி 8 நடால் தொழில்முறை டென்னிஸ் வீரராக விளையாடும் கடைசிப் போட்டியாகும். நடால் எல்லா காலத்திலும் மிகவும் போற்றப்பட்ட விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் வென்ற 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில், 14 பிரெஞ்ச் ஓபன் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
ரஃபேல் நடால் ஓய்வு அறிவிப்பு
ரஃபேல் நடால் புள்ளிவிபரங்கள்
ரஃபேல் நடால் தனது பெயரில் மொத்தம் 92 ஏடிபி ஒற்றையர் பட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் 36 மாஸ்டர்ஸ் பட்டங்கள் மற்றும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் ஆகியவை அடங்கும். கேரியர் கோல்டன் ஸ்லாம் பட்டத்தை ஒற்றையர் பிரிவில் முடித்த மூன்று ஆடவர் டென்னிஸ் வரலாற்றில் ஒருவராக நடால் தனித்துவமான சாதனை படைத்துள்ளார். கடந்த மாதம், லாவர் கோப்பை 2024ல் இருந்து நடால் வெளியேறினார். பாரிஸ் 2024 ஒலிம்பிக்கைத் தொடர்ந்து, 2024 லேவர் கோப்பை தனது அடுத்த போட்டியாக இருக்கும் என்று நடால் உறுதிப்படுத்தி இருந்தார். ஆனால், காயம் காரணமாக அதில் பங்கேற்க முடியாமல் போனது. முன்னதாக, 2024ஆம் ஆண்டு தனது டென்னிஸ் கேரியரில் இறுதி ஆண்டாக இருக்கும் என நடால் முன்னரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.