தமிழ்நாட்டின் 16 வயது கமாலினிக்கு அடித்தது ஜாக்பாட்; மகளிர் ஐபிஎல்லில் ரூ.1.60 கோடிக்கு ஏலம்
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டின் 2025 மினி ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது ஜி கமாலினி நட்சத்திர வீராங்கனையாக உருவெடுத்துள்ளார். ஆடவர் ஐபிஎல் 2025 ஏலம் கடந்த நவம்பரில் நடந்து முடிவடைந்த நிலையில், மகளிர் ஐபிஎல்லுக்கான ஏலம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) பெங்களூரில் 3 மணிக்குத் தொடங்கியது. இதில் பங்கேற்ற கமாலினி, தனது அடிப்படை விலையான ரூ.10 லட்சத்தில் ஏலத்தில் நுழைந்தாலும், அசத்தலான விக்கெட் கீப்பர்-பேட்டரான அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.1.60 கோடிக்கு கைப்பற்றியது. கமாலினியை கைப்பற்ற டெல்லி கேப்பிட்டல்ஸூம் கடுமையான போட்டியைக் கொடுத்த நிலையில், இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.
கமாலினியின் செயல்திறன்
கமாலினியின் இந்த அதிக ஏல தொகைக்கு காரணம் யு19 மட்டத்தில் அவரது நிலையான ஆட்டமாகும். தற்போது யு19 ஆசியக் கோப்பை 2024 அணியில் அங்கம் வகிக்கும் அவர், சமீபத்தில் கோலாலம்பூரில் பாகிஸ்தானுக்கு எதிராக 29 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணியின் யு19 உள்நாட்டுப் போட்டியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார், அந்த தொடரில் எட்டு போட்டிகளில் 311 ரன்கள் குவித்தார். மேலும், தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான யு19 முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா பி அணிக்காக 79 ரன்கள் எடுத்தார். அடுத்த ஆண்டு இந்தியாவின் U19 உலகக் கோப்பை அணியிலும் அவர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.