கப்பலை பிடிக்க ஆட்டத்தை முடித்த வீரர்கள்! 12 நாட்கள் நடந்தும் முடியாத உலக சாதனை கிரிக்கெட் போட்டி
செய்தி முன்னோட்டம்
கிரிக்கெட் வரலாற்றில் இன்று வரை வியப்பாக பார்க்கப்படும் ஒரு சாதனை என்றால், அது 1939 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 'டைம்லெஸ் டெஸ்ட்' (Timeless Test) எனப்படும் கால வரம்பற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும். இந்தப் போட்டி 1939 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் தொடங்கியது. இப்போதெல்லாம், பொதுவாக ஒரு டெஸ்ட் போட்டி ஐந்து நாட்களில் முடிவடைந்துவிடும். ஆனால், அந்த இந்தப் போட்டியில் முடிவு கிடைக்கும் வரை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற விதிமுறை இருந்தது.
நாட்கள்
விளையாடப்பட்ட நாட்கள்
மேலே குறிப்பிட்ட விதியின் காரணமாக, இந்தப் போட்டி மார்ச் 3 முதல் மார்ச் 14 வரை மொத்தம் 12 நாட்கள் நீடித்தது. இதில் 9 நாட்கள் ஆட்டம் நடைபெற்றது, மீதமுள்ள நாட்கள் ஓய்வு மற்றும் மழையினால் தடைபட்ட நாட்களாகும். இந்த போட்டியில் மொத்தமாக 1,981 ரன்கள் குவிக்கப்பட்டன. 5,447 பந்துகள் வீசப்பட்டன. 43 மணிநேரம் 16 நிமிடங்கள் வீரர்கள் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து கிரிக்கெட் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 654 ரன்கள் எடுத்தது. இது ஒரு டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்சில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இன்றும் நீடிக்கிறது.
முடிவு
முடிவே இல்லாத முடிவு
12 நாட்கள் விளையாடியும் இந்தப் போட்டியில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படவில்லை. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், போட்டி டிராவில் முடிந்தது. ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 42 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது, கைவசம் 5 விக்கெட்டுகளும் இருந்தன. ஆனால், இங்கிலாந்து வீரர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்ல கேப்டவுன் துறைமுகத்தில் காத்திருந்த கப்பலைப் பிடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. கப்பலைத் தவறவிட்டால் அடுத்த கப்பலுக்குப் பல வாரங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதால், இரு அணிகளும் பேசி ஆட்டத்தைத் டிரா என அறிவித்தன. இந்த 12 நாள் ஆட்டத்திற்குப் பிறகு, மீண்டும் இதுபோன்ற 'டைம்லெஸ் டெஸ்ட்' போட்டிகள் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.