ஒருநாள் உலகக்கோப்பை 2023 தகுதிச்சுற்றுக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
ஜூன் 18 முதல் ஜூலை 9 வரை ஜிம்பாப்வேயில் நடைபெறும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் பத்து அணிகள் பங்கேற்கும் என்று ஐசிசி செவ்வாய்க்கிழமை (மே 23) அறிவித்தது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பையில் இரண்டு இடங்களுக்கு இந்த 10 அணிகளும் போட்டியிடுகின்றன. தகுதிச் சுற்றில் பங்கேற்கும் 10 அணிகள் ஐந்து அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. போட்டியை நடத்தும் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து, நேபாளம் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் ஏ குழுவிலும், இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை பி குழுவிலும் இடம் பெற்றுள்ளன.
போட்டி அட்டவணை குறித்த விபரம்
ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். இதன் பின்னர் ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் சிக்ஸில், அவர்கள் குழு நிலை ஆட்டத்தில் எதிர்கொள்ளாத அணிகளுடன் விளையாடுவார்கள். இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் விளையாடும். முதல்முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் நோக்கத்தில் இருக்கும் நேபாளத்துக்கு எதிராக ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில், போட்டியை நடத்தும் ஜிம்பாப்வே விளையாடுகிறது. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற புகழ்பெற்ற அணிகளும் இந்த முறை நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்து, தகுதிச்சுற்றில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.