வாட்ஸ்அப் மூலம் மோசடி.. நண்பரின் அனுபவத்தைப் பகிர்ந்த Zerodha சிஇஓ!
தன்னுடைய நண்பர் ஒருவர் ஆன்லைன் மோசடிக்கு ஆளானதை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார் ஸெரோதா நிறுவன சிஇஓ நிதின் காமத். பகுதி நேர வேலை எனக்கூறி சிலர் நிதினின் நண்பரை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டிருக்கின்றனர். முதலில் குறிப்பிட்ட இடங்கள் குறித்து கூகுளில் போலியான ரிவ்யூ இடுவது உள்ளிட்ட சில ஆன்லைன் வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மோசடி செய்யப்பட்டவரின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அந்த வேலைகளுக்காக ரூ.30,000-த்தை அவருடைய கணக்கிலும் செலுத்தியிருக்கின்றனர். பின்னர் டெலிகிராமில் குழு ஒன்றைத் தொடங்கி பொய்யான கிரிப்டோ பிளாட்ஃபார்மில் ட்ரேடிங் செய்யக் கற்றுக் கொடுத்திருக்கின்றனர். அதில் வரும் லாபத்தைக் குழுவில் இருப்பவர்களுடன் பகிர்ந்தளிப்போம் எனவும் நம்பிக்கை வார்த்தை அளித்திருக்கின்றனர் மோசடி நபர்கள். குழுவில் இருப்பவர்களும் அவ்வப்போது நிறைய லாபம் பார்த்ததாக பதிவுகளை இட்டிருக்கின்றனர்.
மக்களே உஷார்:
பின்னர் மோசடி நபரிடம், நிறைய பணத்தை முதலீடு செய்தால் நிறைய சம்பாதிக்காலம், என ஆசைவார்த்தை கூறி ரூ.5 லட்சம் வரை முதலீடுசெய்ய வைத்திருக்கின்றனர். மேலும், குறிப்பிட்ட அளவுக்கு பின்னர் தான் பணத்தை எடுக்க முடியும் எனக்கூறி மேலும் முதலீடு செய்யத் தூண்டியிருக்கின்றனர். மோசடி செய்யப்பட்டவரிடம் பணம் இல்லாமல் போகவே, தாங்களே கடன் தருவதாகவும் கூறியிருக்கின்றனர். இதுகுறித்து அவர் தன்னுடைய மனைவியிடம் ஆலோசனை செய்ய, இது மோசடி செயல் எனப் புரிந்து கொண்ட அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். பின்னர் அந்தக் கிரிப்டோ தளம், டெலிகிராம் குழு ஆகியவற்றை ஆய்வு செய்ததில் அத்தனையும் போலி என்பது தெரியவந்திருக்கிறது. ஆன்லைன் மோசடிகள் குறித்து விழிப்புணவர்வு ஏற்படுத்தினாலும், இதுபோன்ற மோசடிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.