தவறாக முடிந்த யூடியூப் அறிவியல் பரிசோதனை நேரலை
யூடியூப் என்பது காணொளிகளைப் பகிரும் தளமாக மட்டுமில்லாமல், பலருக்கும் வருவாய் அளிக்கும் தளமாகவும் இருந்து வருகிறது. யூடியூபில் பார்வைகளைப் பெற பல்வேறு வகையில், பல்வேறு யூடியூபர்கள் முயற்சித்து வருகிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூர், டேரன் ஜேசன் வாட்கின்ஸ் ஜூனியர். இவர் அவருடைய யூடியூப் தளத்தின் பெயரான 'ஐ ஷோ ஸ்பீடு' (IShowSpeed) என்ற பெயரின் மூலம் பிரபலமாக அறியப்படுகிறார். 18 வயதான இவர், 2.05 கோடி சந்தாதாரர்களுடன் மிகவும் பிரலமான யூடியூப் ஸ்ட்ரீமராக வலம் வருகிறார். நகைச்சுவையான இவருடைய யூடியூப் ஸ்ட்ரீம்களானது பல்லாயிரம் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில் இவருடைய சமீபத்திய யூடியூப் ஸ்ட்ரீம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு, மருத்துவர்களிடம் சிகிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகிருக்கிறார் இவர்.
தவறாக முடிந்த அறிவியல் பரிசோதனை ஸ்ட்ரீமிங்:
சமீபத்தில், யூடியூபில் அறிவியல் பரிசோதனை ஒன்றை நேரடியாக ஸ்ட்ரீம் செய்தார் ஐ ஷோ ஸ்பீடு. 'எலிபண்ட் டூத்பேஸ்டு பரிசோதனை' எனப்படும் பரிசோதனையை யூடியூபில் நேரலை செய்திருக்கிறார் இவர். ஹைட்ரஜன் பெர்ராக்ஸைடு, டிரை ஈஸ்ட் மற்றும் டிஷ் சோப் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்தால் ஆக்ஸிஜன் வாயு வெளியாவதுடன், நுரை போன்ற எதிர்வினை ஏற்படும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இவர் ஸ்ட்ரீம் செய்த போது, நுரை போன்ற அமைப்புடன் புகையும் கிளம்பியிருக்கிறது. அந்தப் புகையானது இவர்கள் இருந்த அறையை முழுவதுமாக நிறைக்க, சிறிது நேரம் அந்த அறையை விட்டு வெளியே சென்றிருக்கிறார். இந்தப் புகையை சுவாசித்ததினால் மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார் இவர்.