இன்று முதல் சிம் கார்டுகளை வாங்குவதற்கு முழுமையான டிஜிட்டல் KYC அமல்
இன்று முதல் இந்தியா முழுவதும் புதிய சிம் கார்டு வாங்குவதற்கு பேப்பர் அடிப்படையிலான KYC நீக்கம் செய்யப்பட்டு, முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட KYC அமலுக்கு வருகிறது. 2012ம் ஆண்டு முதல் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பேட்டர் அடிப்படையிலான KYC-க்கு மாற்றாக, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட KYC 2024, ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக முன்பே அறிவித்திருந்தது மத்திய தொலைத்தொடர்புத் துறை. இந்தப் புதிய KYC முறைப்படி, வாடிக்கையாளர்கள் புதிய சிம் கார்டை வாங்கும் போது தங்களுடைய ஐடி கார்டு ஏதாவது ஒன்றை மட்டும் காட்டினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புக் காரணங்கள்:
சில நிறுவனங்கள் முன்பே டிஜிட்டல் KYC-க்கு மாறியிருந்தாலும், பேப்பர் KYC-யும் பயன்பாட்டிலேயே இருந்து வந்தது. ஆனால், இன்று முதல் அந்த நடைமுறை முற்றிலுமாக நீக்கப்படுகிறது. சமீப காலமாக சிம் கார்டைக் கொண்டு மேற்கொள்ளப்படும் குற்றச் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கு போலியான அடையாளங்களைக் கொடுத்து வாங்கப்படும் சிம் கார்டுகள் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. எனவே, டிஜிட்டல் KYC முறைக்கு மாறுவது, நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எளிதான செயல்பாடாக இருப்பதுடன், குற்றச் செயல்களுக்கு வாங்கப்படும் சிம் கார்டுகளின் பயன்பாட்டையும் நிறுத்தும் அல்லது குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.