இனி எக்ஸ் தளத்தை பயன்படுத்த ஆண்டுக்கு 1 டாலர் கட்டணம்?
எக்ஸ் தளத்தின் (முன்னதாக ட்விட்டர்) வருவாயைப் பெருக்க தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அந்நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க். கொஞ்சம் கொஞ்சமாக எக்ஸ் தளத்தின் பல்வேறு அடிப்படை வசதிகளையும் கட்டண சேவையின் கீழ் கொண்டு சென்ற நிலையில், தற்போது மற்றொரு புதிய அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். அதன்படி, இனி புதிய ட்விட்டர் கணக்கு தொடங்குபவர்கள் 1 டாலர் கட்டணமாக செலுத்தினால் மட்டுமே அத்தளத்தில் பதிவுகளை இடமுடியும். ஆம், இனி எக்ஸ் இலவசம் இல்லை. ஆனால், தற்போது புதிதாக கணக்கு தொடங்கும் பயனாளர்களை குறிவைத்து மட்டுமே இந்தத் திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறது எக்ஸ். அதுவும் முதற்கட்டமாக நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் மட்டுமே அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
என்ன புதிய மாற்றங்களைக் கண்டிருக்கிறது எக்ஸ்?
தெளிவாகக் கூற வேண்டும் என்றால், நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் இனி புதிய எக்ஸ் கணக்குகளை தொடங்குபவர்கள் ஆண்டுக்கு 1 டாலர் என்ற அடிப்படைக் கட்டணத்தை செலுத்தி தான் தொடங்க முடியும். இந்த அடிப்படைக் கட்டணத்தையும் செலுத்த விரும்பாதவர்களால், எக்ஸில் தங்கள் கணக்கின் கீழ் புதிய பதிவுகளையோ அல்லது பிற பதிவுகளை விரும்புவது அல்லது கமெண்ட் செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள முடியாது. பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும். முதற்கட்டமாக மேற்கூறிய நாடுகளில் கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து, உலகளவில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது எக்ஸ். ஆனால், இந்தத் திட்டமானது தற்போதைய பயனாளர்களை பாதிக்காது எனவும் தங்களுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறது எக்ஸ்.