பயனாளர் பெயர்களை விற்பனை செய்யும் புதிய திட்டத்தை அமல்படுத்தும் எக்ஸ்?
'எக்ஸ்' ஆக மாற்றம் செய்யப்பட்ட ட்விட்டர் தளத்தில் பல்வேறு புதிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார் அதன் தற்போதைய உரிமையாளர் எலான் மஸ்க். தொடர்ந்து சரிந்து வரும் எக்ஸின் வருவாயை உயர்த்த, அத்தளத்தில் அவர் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது புதிதாக பயனாளர் பெயர்களை (Username) விற்பனை செய்யும் புதிய திட்டத்தையும் செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார். பயனாளர் பெயர் என்பது பிரத்தியேகமான ஒன்று என்பதால், ஒரு கணக்கிற்குப் பயன்படுத்தப்படும் பயனாளர் பெயரை மற்றொரு கணக்கிற்குப் பயன்படுத்த முடியாது. எக்ஸில் முக்கியமான பிரச்சினையாக இருப்பது பாட்கள் (Bots) தான். எக்ஸ் தளத்தின் முக்கியமான பல பயனாளர் பெயர்களை இந்த பாட்களே எடுத்துக் கொண்டிருந்தன.
பயனாளர் பெயர்களை விற்கவிருக்கும் எக்ஸ்:
இந்த பாட்களை எக்ஸில் இருந்து நீக்கி, அவை எடுத்துக் கொண்ட பயனாளர் பெயர்களை கடந்த சில மாதங்களாக மீட்டெடுத்து வந்திருக்கினறனர் எக்ஸ் ஊழியர்கள். தற்போது 1.5 பில்லியன் பயனாளர்கள் பெயர்கள் வரை பாட்களிடமிருந்து மீட்டெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பயனாளர் பெயர்களை எக்ஸிலியே தனிப் பக்கம் ஒன்றின் மூலம் விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறார் எலான் மஸ்க். குறிப்பிட்ட பயனாளர் பெயர் இதுவரை கிடைக்கப்பெறாதவர்கள், அடுத்து இந்த பயனாளர் பெயர் விற்பனை பக்கத்தின் மூலம் தங்களுக்கான பயனாளர் பெயரை வாங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை விரைவில் அந்நிறுவனம் வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.