ஆதித்யா L1: சூரியனை ஏன் நாம் ஆய்வு செய்ய வேண்டும்?
செய்தி முன்னோட்டம்
நிலவைத் தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் திட்டமான ஆதித்யா L1 திட்டத்தை இன்று செயல்படுத்துகிறது இஸ்ரோ. இன்று நண்பகல் 11.50 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது ஆதித்யா L1.
ஆனால், சூரியனை ஏன் நாம் ஆய்வு செய்ய வேண்டும்?
சூரிய குடும்பத்தின் உயிராக இருப்பது சூரியன் தான். சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிர்கள் பிழைத்திருக்க முடியாது. ஏன், உயிர்கள் உருவாகி இருக்கவே முடியாது எனக் கூறலாம். எனவே, உயிர்களின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக இருக்ககூடிய சூரியனைப் பற்றி புரிந்து கொள்வது அவசியம்.
மேலும், நமக்கு அருகில் இருக்கக்கூடிய நட்சத்திரத்தைப் பற்றிப் புரிந்துகொள்வதன் மூலம், பால்வெளி மண்டலத்தில் உள்ள பிற நட்சத்திரங்களைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ளமுடியும்.
ஆதித்யா L1
பூமியை அச்சுறுத்தும் சூரியன்:
மேலும், பூமியில் ஏற்படக்கூடிய காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களுக்கு சூரியனும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. எனவே, பூமியில் ஏற்படக்கூடிய சில செயல்பாடுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள சூரியனை ஆய்வு செய்வது அவசியமாகிறது.
இது மட்டுமின்றி, கொரோனல் மாஸ் எஜெக்ஷன் மற்றும் சூரியப் புயல்கள் என பூமியை அச்சுறுத்தும் சில செயல்பாடுகளையும் கொண்டிருக்கிறது சூரியன். இவை எதனால் ஏற்படுகிறது, இவற்றால் பூமிக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறதா என்பதையும் சூரியனை ஆய்வு செய்வதன் மூலம் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
இதுவரை, அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளின் ஆய்வுக்கலன்களின் தகவல்களையே தங்களுடைய ஆய்வுகளுக்கும் இஸ்ரோ பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆனால், இனி இந்தியாவின் சொந்த ஆய்வுக்கலனின் தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகளால பயன்படுத்த முடியும்.