
மீடியா தானியங்கி சேமிப்பைத் தடுக்கும் புதிய தனியுரிமை அம்சத்தை வெளியிட வாட்ஸ்அப் திட்டம்
செய்தி முன்னோட்டம்
3.5 பில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பயனர்களைக் கொண்ட மெட்டாவின் முதன்மை மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், பயனர்கள் தங்கள் பகிரப்பட்ட மீடியாவின் மீது கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க தனியுரிமை சார்ந்த அப்டேட்டை அறிமுகப்படுத்த உள்ளது.
புதிய அம்சம், பயனர் தரவு பாதுகாப்பில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கும் வகையில், பெறுநர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்கள் சாதனங்களில் சேமிப்பதை கட்டுப்படுத்த அனுப்புநர்களை அனுமதிக்கும்.
தற்போது சோதனையில் உள்ள இந்த அம்சம், பகிரப்பட்ட மீடியாவை பெறுநரின் கேலரி அல்லது கோப்பு மேலாளரில் தானாகவே சேமிப்பதைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, தற்செயலான சேமிப்பு மற்றும் தனிப்பட்ட அல்லது சென்சிட்டிவான படங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் உள்ளது.
தானியங்கி சேமிப்பு
மீடியாக்களை அனுப்பும் முன் தானியங்கி சேமிப்பு விருப்பதை தேர்வு செய்யலாம்
வரவிருக்கும் அப்டேட், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் என மீடியாவை அனுப்புவதற்கு முன் தானியங்கி சேமிப்பு விருப்பத்தை இயக்க அல்லது முடக்க பயனர்களை அனுமதிக்கும். இது வாட்ஸ்அப்பின் தற்போதைய Disappearing Messages அம்சத்தைப் போன்ற செயல்பாட்டை வழங்குகிறது.
அனுப்புநருக்கு அவர்களின் மீடியா எவ்வாறு கையாளப்படுகிறது என்பது குறித்து அதிகாரத்தை வழங்குவதன் மூலம், வாட்ஸ்அப் பயனர் தனியுரிமையை வலுப்படுத்துகிறது.
ரகசிய அல்லது தனிப்பட்ட காட்சிகளை அடிக்கடி பகிரும் மற்றும் அங்கீகரிக்கப்படாத சேமிப்பு அல்லது மேலும் பகிர்வு குறித்து கவலைப்படும் பயனர்களுக்கு இந்த அம்சம் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
அனுப்புநர்களுக்கு அத்தகைய கட்டுப்பாட்டை வழங்குவதற்கான வாட்ஸ்அப்பின் முடிவு, தனியுரிமை உணர்வுள்ள பயனர்களிடையே தளத்தின் ஈர்ப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.