AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஸ்டிக்கரை உருவாக்கும் வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்களை உருவாக்கிப் பகிரும் புதிய வசதியை பீட்டா சோதனையாளர்களுக்கு அந்நிறுவனம் வெளியிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மிகவும் குறைந்த அளவிலான பீட்டா பயனாளர்களுக்கே இந்த வசதி தற்போது வெளியிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 2.23.17.14 என்ற பீட்டா வெர்ஷனில் இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது வாட்ஸ்அப். இந்த பீட்டா வெர்ஷனைப் பெற்றவர்கள், ஸ்டிக்கர்ஸ் பகுதியில் 'Create' என்ற பட்டனை க்ளிக் செய்து தாங்கள் விரும்பும் ஸ்டிக்கரை AI உதவியுடன் விவரித்து உருவாக்கிக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிட்ஜர்னி மற்றும் டால்-இ உள்ளிட்ட டெஸ்க்ட்-டூ-இமேஜ் AI கருவிகள் செயல்பாட்டையே, வாட்ஸ்அப்பின் இந்தப் புதிய ஸ்டிக்கர் உருவாக்கும் அம்சமும் கொண்டிருக்கிறது. விரைவில் இதனை அனைத்துப் பயனர்களுக்கும் வாட்ஸ்அப் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.