அழைப்புகளை ஷெட்யூல் செய்யும் வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப்
தற்போது அலுவலகப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படும் கூகுள் மீட் மற்றும் ஸூம் ஆகிய சேவைகளுடன் போட்டியிடும் வகையில், வாட்ஸ்அப்பில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது மெட்டா. அதன் பொருட்டு, தங்களுடைய வீடியோ காலிங் சேவையில் பல்வேறு புதிய வசதிகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வரும் நிலையில், ஸூம் மற்றும் கூகுள் மீட் சேவைகளில் இருக்கும் வசதி ஒன்றை தற்போது தங்கள் பீட்டா பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தி வருகிறது. க்ரூப் சாட்களில் கால்களை ஷெட்யூல் செய்யும் வசதியைத் தற்போது அறிமுகப்படுத்தி வருகிறது அந்நிறுவனம். ஆண்ட்ராய்டு 2.23.17.7 பீட்டா வெர்ஷனில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த வெர்ஷனை பதிவிறக்கம் செய்தவர்களால், க்ரூப் சாட்களில் கால்களை ஷெட்யூல் செய்யும் வசதியைப் பயன்படுத்த முடியும்.
வாட்ஸ்அப்பின் திட்டம் என்ன?
சாட்டிங், வீடியோ மற்றும் ஆடியோ கால்கள் மற்றும் பிற வசதிகளுக்கான ஒரே இடமாக தளமாக முயற்சி செய்து வருகிறது வாட்ஸ்அப். அதன் பொருட்டே, அதில் வீடியோ மற்றும் ஆடியோ சேவைகள் தொடர்பான பல புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஷெட்யூல் காலிங் வசதியின் மூலம், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் கால் தொடங்கும் என ஒரு குழுவில் ஷெட்யூல் செய்ய முடியும். மேலும், அந்த கால் வீடியோவா அல்லது ஆடியோவா என்பதனையும் குறிப்பிட்டுக்கு கொள்ள முடிகிறது. ஷெட்யூல் செய்யப்பட்ட கால் தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு குழுவில் இருப்பவர்களுக்கு அதுகுறித்த நோட்டிபிகேஷனையும் அனுப்புகிறது வாட்ஸ்அப். பீட்டா சோதனைக்கு பின்பு, அனைத்து பயனாளர்களின் பயன்பாட்டிற்கும் இந்தப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.