ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்: விரைவில் அறிமுகமாகிறது 'வியூ ஒன்ஸ்' மெசேஜ் வசதி
செய்தி முன்னோட்டம்
புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் வாய்ஸ் நோட்களை தொடர்ந்து, வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் தனியுரிமையை மேலும் பலப்படுத்தும் நோக்கில், ஒருமுறை மட்டுமே படித்துப் பார்க்கக்கூடிய 'View-Once' மெசேஜ் வசதியை ஐபோன் பயனர்களுக்காக உருவாக்கி வருகிறது. இந்த புதிய அம்சம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், பயனர்கள் அனுப்பும் சாதாரண டெக்ஸ்ட் மெசேஜ்களையும் பெறுநர்கள் ஒருமுறை மட்டுமே படிக்க முடியும், அதன் பிறகு அந்த செய்தி சாட்டில் இருந்து தானாகவே மறைந்துவிடும்.
பீட்டா பதிப்பு
ஐபோன் பீட்டா பதிப்பில் கண்டறியப்பட்ட புதிய அம்சம்
வாட்ஸ்அப் அம்சங்களை கண்காணிக்கும் WABetaInfo தளத்தின் அறிக்கையின்படி, ஆப்பிள் டெஸ்ட்ஃபிளைட் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஐபோனுக்கான வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு 26.24.10.16-ல் இந்த புதிய வசதி கண்டறியப்பட்டுள்ளது. இது இன்னும் ஆரம்பக்கட்ட சோதனையில் உள்ளதால், பீட்டா பயனர்களுக்கு கூட தற்போது பயன்பாட்டிற்கு வரவில்லை. ஏற்கனவே ஆண்ட்ராய்டு தளத்திலும் இதற்கான பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதிய வடிவமைப்பு
நீண்ட நேரம் அழுத்தி அனுப்பும் புதிய வடிவமைப்பு
இந்த வசதியைப் பயன்படுத்துவதற்குப் பயனர்கள் தங்களது செய்தியைத் தட்டச்சு செய்த பிறகு, Send பட்டனை நீண்ட நேரம் அழுத்த வேண்டும். அப்போது தோன்றும் பாப்-அப் மெனுவில் "Send as view once" என்ற புதிய விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம். இந்த அம்சம் தனிநபர் சாட்கள் மற்றும் குரூப் சாட்களில் செயல்படும் என்றும், ஆனால் சேனல்களில் இது வேலை செய்யாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடைகள்
ஸ்கிரீன்ஷாட் மற்றும் நகலெடுப்பதற்கான தடைகள்
முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட வியூ ஒன்ஸ் மீடியா கோப்புகளை போலவே, இந்த ரகசிய குறுஞ்செய்திகளையும் பெறுநர்கள் மற்றவர்களுக்கு ஃபார்வர்ட் செய்யவோ அல்லது காப்பி எடுக்கவோ முடியாது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த செய்திகளைப் பயனர்கள் ஸ்கிரீன்ஷாட் அல்லது ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய முடியாதபடி வாட்ஸ்அப் மென்பொருள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுவரை தற்காலிக செய்திகளை அனுப்பப் புகைப்படங்களை மாற்று வழியாகப் பயன்படுத்தி வந்த பயனர்களுக்கு, இந்த நேரடித் தொழில்நுட்ப அம்சம் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.