இந்தியாவில் 37.16 லட்சம் கணக்குகளை, வாட்ஸ்அப் தடை செய்துள்ளது
கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும், இந்தியாவில் 37.16 லட்சம் கணக்குகளை தடை செய்துள்ளதாக, வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை, வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, இது அக்டோபரில் அவர்கள் தடை செய்த கணக்குகளின் எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகம். நவம்பர் மாதம், தடைசெய்யப்பட்ட கணக்குகளில், 9.9 லட்சம் கணக்குகள் முன்னெச்சரிக்கையாக தடை செய்யப்பட்டவை ஆகும். அக்டோபரில், வாட்ஸ்அப் நாட்டில் 23.24 லட்சம் கணக்குகளை தடை செய்தது, இதில் 8.11 லட்சம் கணக்குகள், புகார்கள் வரும் முன்னரே, முன்னெச்சரிக்கையாக தடை செய்யப்பட்டன. "தடை செய்யப்பட்டவை அனைத்தும், இந்தியக் கணக்கு என, +91 தொலைபேசி எண் மூலம் உறுதி செய்யப்பட்டது" என்று, தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்
கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த, IT விதிகளின் படி, பெரிய டிஜிட்டல் தளங்கள் யாவும், ஒவ்வொரு மாதமும் அறிக்கைகளை வெளியிட வேண்டும். அதில், பெறப்பட்ட புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களைக் குறிப்பிடவேண்டும். சிலகாலம் முன்பு வரை, சமூக ஊடகங்களில், பரிமாறப்பட்ட தவறான தகவல், போலி செய்திகள் மற்றும், வெறுப்பு பேச்சு ஆகியவற்றுக்கு பலத்த கண்டனங்கள் வந்தன. அதை தடுக்க, டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள் தன்னிச்சையாக பல கட்டுப்பாடுகளை விதித்தது. சில நேரங்களில், தானாகவே, சில பயனர்களை 'டி-பிளாட்ஃபார்மிங்' செய்தன. இதனால் கடும் எதிர்ப்பு நிலவியது. அதை நிவர்த்தி செய்யும் பொருட்டே, கடந்த வாரம், மத்திய அமைச்சகம், புகார் மேல்முறையீட்டு முறையை அமைப்பதற்கான விதிகளை அறிவித்தது.