மனிதகுலத்திற்கே அச்சுறுத்தல்.. ஓபன்ஏஐயின் புதிய ரகசிய தொழில்நுட்பம் குறித்து வெளிவந்த தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மேம்பாட்டில் உலகளவில் முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம் கடந்த சில வாரங்களாக சிஇஓக்கள் மாற்றங்களால் குளறுபடிகளில் நிறைந்திருந்தது.
அந்நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேனின் நீக்கம் மற்றும் மறுநியமனம் ஆகியவற்றுக்கு இடையே நிகழ்ந்த குளறுபடிகளில், அந்நிறுவனம் மேற்கொண்டு வரும் 'Q ஸ்டார்' (Q*) என்ற செயற்கை நுண்ணறிவுத் திட்டம் குறித்த தகவல்கள் அரசல் புரசலாக வெளியே வரத் தொடங்கியிருக்கிறது.
தற்போதைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மேம்பட்ட வடிவாக, இன்னும் பகுத்திறவுத் திறன் மற்றும் கணித அறிவுத் திறன் நிறைந்த ஒரு தொழில்நுட்பமாக இந்த Q* திட்டத்தின் கீழ் புதிய தொழில்நுட்பத்தை ஓபன்ஏஐ மேம்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ஓபன்ஏஐ
மனிதகுலத்துக்கான அச்சுறுத்தல்?
ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை அறிவியலாளரான இல்யா சுட்ஸ்கேவர் செயற்கை நுண்ணறிவுத் துறையில் திருப்புமுனையை உண்டாக்ககூடிய புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்திருக்கிறார்.
இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு தான் Q* திட்டத்தை ஓபன்ஏஐ செயல்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றி இதனை வணிகமயமாக்குவது பெரிய ஆபத்தை விளைவிக்கும் என ஓபன்ஏஐ நிறுவனத்தின் சில ஊழியர்கள் கருதியிருக்கிறார்கள்.
இந்தப் புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு குறித்தும், அது குறித்த தங்களுடைய கருத்துக்களையும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் இயக்குநர் குழுவிடம் தெரிவித்திருக்கிறார்கள் அந்த சில ஓபன்ஏஐ ஊழியர்கள். பொறுப்பற்ற இதன் மேம்பாடும், பயன்பாடும் மனிதகுலத்துக்கான அச்சுறுத்தலாகவும் அமையலாம் என்பதே அவர்களது கருத்து.
செயற்கை நுண்ணறிவு
ஏன் இந்தப் புதிய தொழில்நுட்பத்தை 'அச்சுறுத்தல்' எனக் கருதினர்?
ஓபன்ஏஐ, Q* திட்டத்தின் கீழ் உருவாக்கி வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்மானது, கணிதத்தைக் கற்றுக் கொண்டு, தான் கற்றுக் கொண்டதன் வழியாக அடிப்படைக் கணிதக் கணக்குகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கும் திறனைக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
தற்போது அடிப்படைக் கணக்குகளை தீர்க்கும் திறனை மட்டுமே இவை கொண்டிருந்தாலும், சிக்கலாக சிந்திக்கக்கூடிய வகையிலான கணக்குளை தீர்க்கும் திறனையும் இவை வளர்த்துக் கொள்ளும் திறனை இவை கொண்டிருப்பதாகக் கருதியிருக்கின்றனர் ஓபன்ஏஐ ஊழியர்கள் சிலர்.
இதன் 'செயற்கை பொது நுண்ணறிவு' (Artificial General Intelligence) எனக் கூறப்படும் மேம்பட்டதொரு தொழில்நுட்பை அடைவதற்கான அடுத்த படியாக இருக்கும் எனவும் அவர்கள் கருதியிருக்கின்றனர்.
தொழில்நுட்பம்
'செயற்கை பொது நுண்ணறிவு' என்றால் என்ன?
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை பல்வேறு நிறுவனங்களும் வெளியிடத் தொடங்கிய போதே, உலகளவில் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த செயற்கை பொது நுண்ணறிவைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள்.
தற்போதிருக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள், நாம் கொடுக்கும் தகவல்களை ஆராய்ந்து அதிலிருந்து நாம் கேட்கும் கேள்விகளுக்கான தகவல்களைத் 'தொகுத்து' மட்டுமே நமக்கு வழங்குகிறது.
ஆனால், செயற்கை பொது நுண்ணறிவு என்பது, நாம் கொடுக்கும் தகவல்களை ஆராய்ந்து அதனைக் கொண்டு மணிதர்களைப் போலவே சிந்தித்து முடிவெடுக்கும் திறன் கொண்ட ஒரு தொழில்நுட்பமாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த செயற்கை பொது நுண்ணறிவு என்பது சாத்தியமாகக்கூடிய நிலையில் இல்லை, பேச்சளவில் மட்டுமே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சாம் ஆல்ட்மேன்
'அச்சுறுத்தல்' கருத்தை புறக்கணித்த சாம் ஆல்ட்மேன்:
ஓபன்ஏஐயின் சில ஊழியர்கள் Q* திட்டம் குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவித்தும், சாம் ஆல்ட்மேன் அதனைப் புறக்கணித்திருப்பதாகத் தெரிகிறது. மேலும், அந்தப் புதிய AI தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் தான் ஆல்ட்மேன் தீவிரமாக இருந்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்தே, அந்நிறுவனத்திற்குள் பிரிவுகள் உண்டாகத் தொடங்கி அதன் விளைவாகக் கடந்த வாரக் களேபரங்கள் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.
சிலர் ஓபன்ஏஐயின் இந்த Q* திட்டத்தை ஒரு கேம்சேஞ்சர் எனக் குறிப்பிடும் நிலையில், சிலர் அதற்கு எதிரான நிலையில் இருக்கிறார்கள்.
புதிய மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்த பாதுகாப்பான வரையறைகள் இல்லாத நிலையில், Q* போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் விளக்கை மட்டுமல்லாது வீட்டையும் கொளுத்தலாம் என்பதே அதனை அச்சுறுத்தலாகப் பார்ப்பவர்களின் வாதமாக இருக்கிறது.