கூகுளின் வருடாந்திர I/O நிகழ்வு.. என்ன எதிர்பார்க்கலாம்?
ஒவ்வொரு வருடமும் தங்களுடைய மென்பொருள் மற்றும் வன்பொருளின் புதிய அப்டேட்களை தங்களுடைய வருடாந்திர I/O மாநாட்டில் கூகுள் நிறுவனம் வெளியிடும். இந்த ஆண்டு கூகுளின் I/O டெலவப்பர்கள் நிகழ்வு வரும் மே 10-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இந்த கூகுள் நிகழ்வு தொடங்குகிறது. இந்த நிகழ்வினை ஒவ்வொரு வருடமும் யூடியூப் தளத்தில் கூகுள் நிறுவனம் நேரலை செய்யும். இந்த வருடம் யூடியூபில் மட்டுமல்லாது, தங்களுடைய மற்ற சமூக வலைத்தளப் பக்கங்களிலும் I/O நிகழ்வை நேரலை செய்யவிருக்கிறது கூகுள். இவை தவிர இந்த நிகழ்விற்கான பிரத்தியேக கூகுள் இணையப்பக்கத்திலும் நேரலையில் காணலாம்.
என்னென்ன புதிய அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன?
ஆண்ட்ராய்டு 14-ன் பீட்டா வெர்ஷன் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்ட்ராய்டு 14 குறித்த தகவல்களை I/O நிகழ்வில் கூகுள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. AI சேவையில் புதிய முன்னேற்றங்களாக பார்டு AI மற்றும் புதிய AI சேவையுடன் கூடிய தேடுபொறி குறித்த தகவல்களை இந்த I/O நிகழ்வில் கூகுள் நிறுவனம் பகிர்ந்து கொள்ளலாம். பிக்ஸல் 6a-வின் அப்டேட்டட் வெர்ஷனான பிக்ஸல் 7a, பிக்ஸல் ஃபோல்டு மற்றும் பிக்ஸல் பேடு ஆகிய சாதனங்களை கூகுள் இந்த I/O நிகழ்வில் வெளியிடும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது. இவை தவிர இரண்டாம் தலைமுறை பிக்ஸல் பட்ஸ் A மற்றும் விலை குறைவான பட்ஸ்களையும் இந்த நிகழ்வில் கூகுள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.