எக்ஸில் இனி விளம்பரம் செய்வதில்லை என முடிவெடுத்த வால்மார்ட், ஏன்?
ஆப்பிள் மற்றும் ஐபிஎம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தில் இனி விளம்பரம் செய்வதில்லை என கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தன. எக்ஸ் தளத்தில் யூத எதிர்ப்பு கருத்து ஒன்றைப் பகிர்ந்த பயனாளர் ஒருவருக்கு, அதனை ஆதரிக்கும் விதமாக எலான் மஸ்க் மறுமொழி அளித்ததைத் தொடர்ந்து இந்த முடிவை அமெரிக்க நிறுவனங்கள் எடுத்தன. தற்போது அந்த வரிசையில் அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் நிறுவனமும் இணைந்திருக்கிறது. இனி எக்ஸ் தளத்தில் தாங்களும் விளம்பரம் செய்வதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம். ஆப்பிள், ஐபிஎம் மற்றும் வால்மார்ட் தவிர்த்து, சோனி, டிஸ்னி, காம்காஸ்ட் மற்றும் பாராமவுண்ட் ஆகிய அமெரிக்க நிறுவனங்கள் எக்ஸில் விளம்பரம் செய்வதில்லை என முடிவெடுத்திருக்கின்றன.
வீழ்ச்சியில் எக்ஸின் விளம்பர வருவாய்:
வால்மார்டின் இந்த முடிவு குறித்து விளக்கமும் அளித்திருக்கிறார் அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர். அதன்படி, எக்ஸை விட பிற தளங்கள் மூலம் தங்களுடைய வாடிக்கையாளக்களுடன் தங்களால் தொடர்பு கொள்ள முடிகிறது" என்றும், அதனாலேயே எகிஸில் விளம்பரம் செய்வதை நிறுத்துவது குறித்த இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் அவர். எக்ஸில் விளம்பரம் செய்யாமல் இருக்கும் முடிவை வால்மார்ட் இப்போது எடுத்திருந்தாலும், கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே எக்ஸ் தளத்தில் அந்நிறுவனம் விளம்பரம் எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய நிறுவனங்களே எக்ஸின் 7% விளம்பர வருவாய்க்கு முக்கிய காரணமாக இருந்து வருகின்றன. தற்போது அதிகளவிலான விளம்பர வருவாய் இழப்பிற்கு ஆளாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது எக்ஸ்.