இந்தியாவில் வெளியானது 'விவோ X100' மற்றும் 'X100 ப்ரோ' ஸ்மார்ட்போன்கள்
இந்தியாவில் தங்களது புதிய X100 மற்றும் X100 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ. இந்த ஸ்மார்ட்போனை, கடந்த 2023 நவம்பரில் சீனாவிலும், கடந்த டிசம்பர் மாதம் உலகளவிலும் விவோ வெளியிட்ட நிலையில், தற்போது இந்தியாவிலும் வெளியாகியிருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும், ZEISS நிறுவனத்துடன் இணைந்து தாங்கள் உருவாக்கிய கேமரா மற்றும் தங்களுடைய சொந்த இமேஜ் பிராசஸிங் சிப் ஆகியவற்றைப் பயன்படுத்தியிருக்கிறது விவோ. மேலும், கூகுளின் ஃப்ளாக்ஷிப் இயங்குதளமான ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 14-ஐ இந்தப் புதிய ஸ்மார்ட்போன்களில் வழங்கியிருக்கிறது விவோ.
விவோ X100: வசதிகள் மற்றும் விலை
விவோ புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்களில், அடிப்படையான X100 மாடலில், 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட, 6.78 இன்ச் LTPO AMOLED திரை கொடுக்கப்பட்டிருக்கிறது. பின்பக்கம் 50MP முதன்மை கேமரா, 50MP அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 64MP டெலிபோட்டோ கேமராவும், முன்பக்கம் 32MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இத்துடன் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 ப்ராசஸரை இந்த X100 மாடலில் கொடுத்திருக்கிறது விவோ. மேலும், X100 மாடலில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் 12GB/256GB அடிப்படை வேரியன்டை ரூ.63,999 விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது விவோ. மற்றொரு வேரியன்டான 16GB/512GB வேரியன்டானது, ரூ.69,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
விவோ X100 ப்ரோ: வசதிகள் மற்றும் விலை
விவோ X100 சீரிஸின் X100 ப்ரோ மாடலிலும், 6.78 இன்ச் LTPO AMOLED திரையையே பயன்டுத்தியிருக்கிறது விவோ. பின்பக்கம் 50MP 1-இன்ச் முதன்மை கேமரா, 50MP அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 50MP டெலிபோட்டோ என்ற ட்ரிபிள் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 32MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரையும் வழங்கியிருக்கிறது விவோ. இந்த X100 ப்ரோவில், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,400mAh பேட்டரியைக் கொடுத்திருக்கிறது விவோ. இந்த டாப்-எண்டான X100 ப்ரோ மாடலின் 16GB/512GB வேரியன்டை ரூ.89,999 விலையில் இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது விவோ. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஜனவரி 11ம் தேதி முதல் அனைத்து தளங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவித்திருக்கிறது விவோ.